கல்லூரியின் வரலாறு

வாழைச்சேனை 
அந்நஹ்ஜதுல் இஸ்லாமிய்யா அரபுக் கல்லூாி 
ஆரம்பமான வரலாறு

மட்டக்களப்பு மாவட்டத்தில் , கல்குடா பிரதேசத்தில் , கோறளப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவின் இதயமான வாழைச்சேனையில்; அமையப் பெற்றுள்ள அரபுக் கல்லூரியே குல்லியதுன் நஹ்ஜதில் இஸ்லாமிய்யா ஆகும். இக் கல்லூரியின் ஆரம்ப வரலாறு பற்றி சற்று நோக்குவோம்.
வாழைச்சேனை பிரதேசத்தில் அல்குர்ஆனை மனனம் செய்யும் ஒரு கலாபீடத்தை தோற்றுவிக்க வேண்டும் என்ற எண்ணத்தை இப்பிரதேசத்தைச் சேர்ந்த சில உலமாக்கள் , ஆசிரியர்கள் , தனவந்தர்களின் உள்ளத்தில் அல்லாஹ் ஏற்படுத்தினான். அல்ஹம்து லில்லாஹ் ! இந்த எண்ணத்தை நடைமுறைபடுத்துவதற்கு முன்னோடியாக 05.05.1990 இல்; வாழைச்சேனை முஹைதீன் ஜூம்ஆ பள்ளிவாயலில் மர்ஹூம் மௌலவி அல்ஹாஜ் S.L. அப்துல்கபுர்  ( ஸதகா ) மௌலவி அவர்களின் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் “ ஜாமிஅதுன் நஹ்ஜதில் இஸ்லாமிய்யா ” என்ற பெயரில் அல்குர்ஆன் மனனப் பிரிவை ஆரம்பிப்பது என தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

டிஸம்பர் 08ம் திகதி; 1992ம் ஆண்டு முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தில் கல்லூரியை பதிவுசெய்த பொழுது            “ குல்லியதுன் நஹ்ஜதில் இஸ்லாமிய்யா ” என்று கல்லூரியின் பெயர் மாற்றப்பட்டது. இதனை முன்னெடுதுச் செல்லும் வகையில்  ஒரு நிருவாக சபையும் தெரிவுசெய்யப்பட்டது. நிருவாக சபைத் தலைவராக அல்ஹாஜ் M.L.H. முஹம்மது (JP) அவர்களும்; உப தலைவராக M.A.C.M புஹாரி மெளலவி அவர்களும் , செயலாளராக U அஹ்மத் ஆசிரிய ஆலோசகர் அவர்களும் , உப செயலாளராக A.L மீராஸாஹிப் அதிபர் அவர்களும்;  பொருளாளராக அல்ஹாஜ் M.I சீனி முகம்மது அவர்களும்;  பணிப்பாளராக அல்ஹாஜ் S.L அப்துல்கபுர் (ஸதகா)  மௌலவி அவர்களும் தெரிவுசெய்யப்பட்டதுடன் , நிருவாக சபை உறுப்பினர்களாக அல்ஹாஜ் K.M.S ஹமீத் , அல்ஹாஜ் M.I அசனார் , மௌலவி M.S பரீத் ஆகியோரும் தெரிவுசெய்யப்பட்டனர்.

கல்லூரியை ஆரம்பிப்பதற்கு தேவையான (பழைய) கட்டிடத்துடன் உள்ள நிலத்தை மர்ஹூம் அல்ஹாஜ் S.L அப்துல்கபுர் (ஸதகா)  மௌலவி அவர்கள் அன்பளிப்பு செய்தார்கள். மற்றும் ஆரம்பச் செலவுகளை ஏனைய நிருவாகிகள் பொறுப்பேற்றுக்கொண்டனர்.
ஆரம்ப வேலைகள் நிறைவுசெய்யப்பட்டு 06.06.1990. இல் 19 மாணவர்களையும் சம்மாந்துறையைச் சேர்ந்த அல்ஹாபில் அப்துர்ரஷீத் அவர்களை ஆசிரியராகவும் கொண்டு , ஹிப்ழு – அல்குர்ஆன் மன்னப் – பிரிவு ஆரம்பிக்கப்பட்டது. மேலும் இடப்பற்றாக்குறை ஏற்பட்டபோது கடல் தொழில் புரியும் வாழைச்சேனை பிரதேச பிரமுகர்களின் உதவியுடன் மூன்று கட்டங்களாக 1994 , 1995 , 1996 காலப் பகுதிகளில் காணிகள் – நிலங்கள் - கொள்வனவு செய்யப்பட்டு கல்லுரியின் நிலப்பரப்பு வஸ்தரிக்கப்பட்டது. கடல்  தொழில் புரியும் வாழைச்சேனை பிரதேச பிரமுகர்கள் தங்களின் தொழில் வருமானத்திலிருந்து ஒரு தொகையை வழங்கியதன் காரணமாக கல்லூரியின் நிதித்தேவைகள் நிவர்த்திசெய்யப்பட்டன.
சம்மாந்துறை தப்லீகுல் இஸ்லாம் அரபுக் கல்லூரியின் அதிபர் அஷ்ஷெய்ஹ் மௌலான மௌலவி அலியார் தேவ்பந்தி அவர்களும் ,  காத்தான்குடி ஜாம்அதுல் பலாஹ்; அரபுக் கல்லூரியின் பிரதி அதிபர் அஷ்ஷெய்ஹ் மௌலான மௌலவி S.M அலியார் பலாஹி அவர்களும் கல்லூரியை ஆரம்பித்துவைக்க வருகைதந்தனர்.
இக்கல்லூரியின் முதலாவது அறுவடையாக ஏழு ஹாபில்கள் 1993 இல்  உருவாகினர். இந்த ஏழு மாணவர்களைக் கொண்டு  14.07.1993 இல்  கிதாபு      - ஷரீஆ -     பிரிவு ஆரம்பிக்கப்பட்டதன் மூலம் இக்கல்லூரி ஹிப்ழு , கிதாபு – ஷரீஆ - எனும் இரு பிரிவுகளைக் கொண்ட ஒரு அரபுக் கல்லூரியாகத் தரம் உயர்த்தப்பட்டது. அல்ஹம்து லில்லாஹ் ! இவ்வாறுதான் வாழைச்சேனை அந்நஹ்ஜதுல் இஸ்லாமிய்யா அரபுக் கல்லூரி ஆரம்பமானது.

பதிவுசெய்தவர் அதிபர் அல்ஆலிம் இப்னுல் ஃபலாஹ் அல்அத்ரமி.







வாழைச்சேனை
அந்நஹ்ஜதுல் இஸ்லாமிய்யா
அரபுக் கல்லூரியின்
ஆளுமைமிக்க
ஆயுள் காலத் தலைவர்
அல்-ஹாஜ். ML.அச்சி முஹம்மத் (JP).
……………………………………………..

அஷ்ஷெய்ஹ் அல்ஹாஃபில்
ஏ.எம். இஸ்ஸத் அஹ்மத் அந்நஹ்ஜி.


بسم الله الرحمن الرحيم ،
الحمد لله رب العالمين ،
والصلاة والسلام على سيدنا محمد وآله وصحبه اجمعين.
 

மூன்று தசாப்தங்கள்; முழு மூச்சான சேவை; அந்-நஹ்ஜா அரபுக்கல்லூரி அச்சி ஹாஜியாரின் கல்லூரியாய் ஆகிப்போனது. 06.06.1990 இருந்து இது நாள் வரை இயக்குனர் சபைத் தலைவராக ஓய்வின்றி இயங்கிக் கொண்டிருக்கும்  அந்-நஹ்ஜாவின் ஸ்தாபகர்களில் ஒருவரான அல்ஹாஜ் எம். எல்.எச். முஹம்மது அவர்களின் பயோகிராபி எழுத்து வடிவம் பெறும் இவ்வேளையில் அவர் நோய்வாய்ப்பட்டு படுக்கையில் இருக்கிறார். அவருக்கு நிறைவான தேகாரோக்கியம் கிடைக்கவும் அவரின் சேவைகள் மீஸானுல் ஹஸனாத்தில்  கதிக்கவும்     மனமுருகிப் பிரார்த்திக்கிறேன். 

நாம் அனைவரும் அன்னாருக்காக துஆ செய்வோமாக!

 பிறப்பும் குடும்பப் பின்னணியும் :

1949 ஆம் ஆண்டு வாழைச்சேனைக் கிராமத்தில் சாதாரண குடும்பமொன்றில் முஸ்தபா லெப்பை ஆசியா உம்மா தம்பதிகளின், இரு ஆண் பிள்ளைகள், நான்கு பெண் பிள்ளைகள் என அறுவர் கொண்ட குடும்பத்தில் இரண்டாவது பிள்ளையாக பிறக்கிறார். சாதாரண பெற்றோர், சாதாரண குடும்பம், பிள்ளைப்பருவம் ஆரவாரமின்றி கழிந்து முடிகிறது.

 கல்வி :

 வாழைச்சேனை அரசினர் கலவன் பாடசாலையில் தனது ஆரம்பக் கல்வியையும் தரம் 8 வரையான இடைநிலைக் கல்வியையும் பெற்றுள்ளார். அந்நாட்களில் தரம் 8 இப்போதைய உயர் தரத்திற்கு சமாந்தரமாக பார்க்கப்பட்டது என்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கதாகும். தனது ஆரம்ப குர்ஆன் கல்வியை ஆட்டுக்குட்டி ஆலிம் என அறியப்பட்ட லெப்பை தம்பி ஹஸ்ரத்திடம் கற்றுள்ளார்.

தொழில்  வாழ்க்கை :

தரம் எட்டோடு தனது பாடசாலைக் கல்வியை  நிறுத்திக் கொண்ட M.L. அச்சி முஹம்மது ஹாஜியார் தொடர்ந்து சுய தொழில் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். வாழைச்சேனை  சந்தையில் சிறு அளவில் ஒரு தேநீர்க்கடை ஒன்றினை சிறிது காலம் நடாத்தியுள்ளார். பின் அதனை கைவிட்டு வாழைச்சேனை கடதாசி ஆலையில் சுமார் மூன்று ஆண்டு காலம்  பணிபுரிந்துள்ளார். 1978ம் ஆண்டின் சூறாவளி நிகழ்வே ஹாஜியாரின் தொழில் வாழ்க்கையின் திருப்பு முனை எனலாம்.   சூறாவளியுடன் கடதாசி ஆலை தொழிலினை கைவிட்டு மீண்டும் சுயதொழில் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். வாழைச்சேனை கல்குடாவிற்குச் சென்று மீன்கள் மற்றும் கடல் உணவுகளை மொத்தமாக கொள்வனவு செய்து வந்து வாழைச்சேனை சந்தையில் வியாபாரம் செய்துள்ளார். இதன் பிறகே ஹாஜியாரின் வாழ்வில் செல்வம் கொழிக்கத் தொடங்கியது. எண்பதுகளின் துவக்கத்தில் மீன்பிடி படகுகளை சொந்தமாக வைத்து தொழிலில் ஈடுபட்டு பெரும் செல்வத்தை ஈட்டியுள்ளார். அந்நேரம் வாழைச்சேனை கிராமத்தில் காணப்பட்ட விரல்விட்டு எண்ணக்கூடிய பணக்காரர்களுல் அச்சி ஹாஜியாரும் ஒருவராகும். தன் உழைப்பால் ஈட்டிய பெரும் செல்வத்தை அன்றிலிருந்து கணக்கின்றி இறை பாதையில் இறைக்கத் தொடங்கினார்.

 திருமணவாழ்வு :

 1969 ஆம் ஆண்டு முகம்மது இஸ்மாயில் ஸீனத்தும்மா என்பவரை  கரம்பற்றி சிறப்பான குடும்ப வாழ்வு ஒன்றை தொடங்கினார். திருமண பந்தத்தின் மூலம் அவருக்கு நான்கு ஆண் பிள்ளைகளும் நான்கு பெண்பிள்ளைகளும் உள்ளனர்.  2006 ஆம் ஆண்டு தனது பாசமிகு மனைவி ஸீனத்தும்மா இறையடி சேர்ந்த பிறகு 2007 ஆம் ஆண்டு விதவையான நாகூர் உம்மாவை இரண்டாம் தாரமாக மணமுடித்துக் கொண்டார். இதிலும் ஒரு ஆண் பிள்ளை உண்டு. 1986 ஆம் ஆண்டு முதல் தடவையாக புனித மக்கா சென்று ஹஜ் கடமையினையும் நிறைவேற்றி உள்ளார்.

 சமூகப்பணி :

90களில் வாழைச்சேனை முகைதீன் ஜூம்மா பள்ளிவாயலில் பொதுமக்களால் பல தடவைகள் ஏகமனதாக பிரதம தர்மகர்த்தாவாக தெரிவு செய்யப்பட்டு ஒரு தசாப்தத்திற்கும் மேலாக அல்லாஹ்வின் மாளிகையை பரிபாலனம் செய்யும் பெரும் பேற்றினைப் பெற்றார். ஈழப் போர் உச்சத்தை தொட்டிருந்த இந்நாட்களில் இது போன்ற சமூகப் பணிகள் மிகவும் சவாலானதாகும்.

வாழைச்சேனை கடல் வளமிக்க  பிரதேசமாகும். இப்பிரதேச மக்களின் ஜீவனோபாயமாக  கடற்றொழிலே விளங்குகிறது.கடற்றொழில்  மூலம் பெறப்படும் வருமானத்தின் ஊடாக பொதுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்ற உயர்ந்த எண்ணம்  இப்பிரதேச தனவந்தர்கள் சிலருக்கு ஏற்பட்டது. அதன் பயனாக 1994ஆம் ஆண்டு  உருவானதே வாழைச்சேனை ஹைராத் ட்ரஸ்ட் நிறுவனமாகும்.

 வாழைச்சேனையில் இருந்து மீன்களை ஒரு பொதுப் போக்குவரத்து மூலம் கொழும்புக்கு ஏற்றி பெரும் வருமானத்தை ஈட்டுவதே இதன் இலக்காகும். இந்த நிதியினை வாழைச்சேனை ஹைராத் மஸ்ஜிதின் நிர்மானத்திற்கும் அந்-அநஹ்ஜா அரபுக் கல்லூரிக்கும் செலவழிப்பதே ஹைறாத் ட்ரஸ்டின் பிரதான இலக்குகளாகும். இதனைத் தாண்டி பல உப இலக்குகளையும் எய்த ஹைறாத் ட்ரஸ்டினால் முடிந்துள்ளமை நிதர்சனமாகும். இந்நிறுவனத்தை தாபிக்க தங்களது சொந்தப் பணத்தை முதலீடு செய்து மிகப்பெரும் சதக்கத்துன் ஜாரியா ஒன்றுக்கு வித்திட்ட ஆரம்ப கர்த்தாக்களுள் ஹாஜியாரும் ஒருவராகும்.

 அச்சி ஹாஜியாரின் அந்-நஹ்ஜா :

 06.06.1990 இல் அந்-நஹ்ஜா  அரபுக்கல்லூரி உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்யப்பட்ட தினத்திலிருந்து இன்று வரை (18.01.2020) கல்லூரியின் இயக்குனர் சபைத் தலைவராக செயற்பட்டு வருகிறார் அச்சி ஹாஜியார். மூன்று தசாப்தங்கள், ஒரே கல்வி நிறுவனத்தில் பல்வேறு பரிமாணங்களில் தொண்டாற்ற கிடைப்பது பெரும் பேறாகும் என்பதில் ஐயமேதுமில்லை. அத்தகைய வரப்பிரசாதம் ஒன்றை இறைவன் அன்னாருக்கு நல்கியுள்ளான். இருநூற்றுக்கும் மேற்பட்ட 'ஹபழதுல் குர்ஆன்' இறைமறையை தங்களது உள்ளங்களில் சுமந்தவர்கள், கிட்டத்தட்ட அதே எண்ணிக்கையான இறை மார்க்கத்தை அதன் தூய வடிவில் உலகமெல்லாம் எடுத்தோதும் ஆலிம்கள் (மௌலவிமார்கள்) உருவாக்கத்தின் பின்னால் கருவியாய் தொழிற்பட கிடைத்த பாக்கியத்தை என்னவென்று சொல்வது !?

இதற்கு பின்னால் அன்னாரின் தூய எண்ணமும் அர்ப்பணிப்பும் இருக்கும் என்பதில் எமக்கு மாற்றுக் கருத்தில்லை.

 எண்பதுகளின் இறுதியில் வாழைச்சேனை முகைதீன் ஜூம்மா பள்ளிவாயலில் ஒரு சின்னஞ்சிறு பிள்ளை தன் மெல்லிய குரலில் குர்ஆனை ரமளான் கால இராத் தொழுகையில் ஓதி தொழுகை நடத்துகிறது. இந்நிகழ்வே ஹாஜியாரின் உள்ளத்தில் மார்க்கக் கல்வியைப் போதிக்கும் ஒரு கலாசாலை ஒன்றினை துவங்க வேண்டும் என்றிருந்த எண்ணத்திற்கு உடனடியாக செயல்வடிவம் கொடுக்க வேண்டும் என தூண்டிய காரணியாகும். அன்று ஊரிலிருந்த வெகு சில உலமாக்கள், புத்திஜீவிகள், கல்விமான்கள், தனவந்தர்கள் என சிறு குழுவினர் வாழைச்சேனை முகைதீன் ஜூம்மா பள்ளிவாயலில் ஒன்று கூடி ஆலோசித்து முடிவெடுத்ததன் பயனாக ஜாமிஅதுந் நஹஜதில் இஸ்லாமிய்யா எனும் பெயரில், அரபுக்கல்லூரி, இப்போது அமைந்திருக்கும் இடத்தில் சிறு அளவில் 20 மாணவர்களை கொண்டு 06.06.1990 ஆம் ஆண்டு புதன்கிழமை காலை வேளையில் சம்மாந்துறை தப்லீகுல் இஸ்லாம் அரபுக் கல்லூரியின் அதிபர் அலியார் (தேவ்பந்தி), காத்தான்குடி ஜாமியதுல் பலாஹ் அரபுக் கல்லூரியின் பிரதி அதிபர்அலிகார் (பலாஹி) ஹஸ்ரத் ஆகியோர்களை கொண்டு உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

அச்சி ஹாஜியார் அரபுக் கல்லூரியின் துவக்க காலத்தில், தனது உடல், பொருள், காலம் எல்லாவற்றையும் அர்ப்பணித்து, ஒப்பற்ற, தன்னலமற்ற சேவை ஒன்றை வழங்கினார். கல்லூரியின் இயக்குனர் சபை தலைவராக மட்டுமல்லாமல் தேவையின் நிமித்தம் அதிபராக, ஆசானாக, காவலாளியாக, சமையற்காரராக, ஏன் சுத்திகரிப்பு தொழிலாளியாகக் கூட பரிமாணம் எடுத்திருக்கிறார். வெளியூர் பயணங்கள் சென்று திரும்பும் போது, தன் சொந்தப் பிள்ளைகளுக்குப் போல மத்ரசாவில் பயின்ற மாணவர்கள் எல்லோருக்கும் தந்தையின் இடத்திலிருந்து பழமும் இனிப்புப் பண்டமும் வாங்கித் தந்தது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. நஹ்ஜா அரபுக்கல்லூரி இப்பிரதேசத்திலேயே சிறந்த ஓர்  கலாசாலையாகவும், அங்கிருந்து பட்டம் பெற்று வெளியே வருவோர், இத்தேசத்திற்கே பயன்தரத்தக்க தலைசிறந்த உலமாக்களாக வேண்டும் என்ற கனவும் இலட்சியமும் அவருள் இருந்துகொண்டே இருந்தது. கனவு நனவாகவும் இலட்சியம் ஈடேறவும் சதாவும் அவர் உழைத்துக்கொண்டே இருந்தார்; இருக்கிறார். அதில் குறிப்பிடத்தக்க வெற்றியும் கண்டுள்ளார். இதில் இன்னும் நீண்ட நெடிய தூரம் பயணிக்க வேண்டும் என்ற யதார்த்தத்தையும் புரிந்து செயற்பட்டுக் கொண்டிருக்கிறார். மொத்தத்தில் அச்சி ஹாஜியார் என்றால் அந்-நஹ்ஜா என்பதே அடையாளமாகிப்போனது.

 அச்சி ஹாஜியார்   தேகாரோக்கியத்துடன் நீண்ட நாள் வாழவும் தன் கனவு மெய்ப்பட உழைக்கவும் இறைவன் அனுகூலம் செய்ய பிரார்த்திக்கின்றேன். தாங்களும் பிரார்த்திப்பீர்களாக!

اللهم اشف امراضه واَطِلْ حياته واغفر ذنوبه وتقبل منه يا رب العالمين !

===